Tuesday, July 11, 2017

நீளும் இரவுகள்

கருமை ஆற்றில் மூழ்கி
கண் விழித்துப் பார்க்கையில்
எங்கும் தோன்றும் இருள் வெள்ளத்தில்
சிக்கித் தவிக்கும் சிறு பூச்சி போல

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கருநீல கடலும் வானும்
போட்டி போட்டுக்கொண்டு
விரிந்து செல்லும் ஒரு நேர்க்கோட்டில்

எது முந்திச்செல்கிறது என
கணிக்க முடியாமல் நீளும் இரு
போர்வைகளும் தூரத்தில் ஒன்றாய்
மடிக்கப்படும் பொழுது

மீன்களும் விண்மீன்களும்
இரண்டறக்கலக்கும் தொடுவானத்தின்
மடிப்பின் இடைவெளியில்
அகப்பட்டுக்கொண்டு மூழ்கும்
என் இரவுகள்

Tuesday, November 29, 2016

கரையும் மேகங்களும் கரையா தாகங்களும்

காந்தக்கட்டி கொண்டு விரவியிருக்கும்
இரும்புத்துண்டுகளை ஈர்ப்பது போல்
ஆங்காங்கே பரவியிருக்கும்
நீர்நிலைகளில் நீரையீர்த்து
சிறு குழந்தை கட்டும்
கடற்கரை மணல் வீடுகளாய்
நீரைத்தேக்கி வைக்கும் மேகக்கூட்டங்கள்


பூனைக்குட்டி அவசர அவசரமாய்
கிண்ணத்தில் இருக்கும் பாலைக்குடிக்கச்சென்று
பதட்டத்தில் தட்டி விட்டது போல்
சிதறிக்காணப்படும் வெண்மேகங்கள்



வானத்தைக் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு
கடலைக் கொஞ்சம் குடித்து விட்டு
வெளியிட்ட ஏப்பம் போல
வானில் நீந்தும் நீலமேகங்கள்



இருளுக்கு கோபம் வந்து
வானத்துடன் சண்டை போடுகையில்
திரட்டிய போர்க்கூட்டம் போல
காணப்படும் கார்மேகங்கள்



காதலன் தீண்டலுக்கு
வெட்கப்பட்டு ஓடுகையில்
அவன் ஓடிப்பிடித்து அணைக்கையில்
நாணத்தால் உருகுவது போல்
குளிர் காற்றின் தீண்டலில்
மழையாய் கரையும் மேகங்கள்



நீண்ட நாள் பிரிவிற்குப்பின்
வீடு வந்த பிள்ளையை
அணைத்துக்கொள்ளும் தாயைப்போல்
மழையை தன்னுள் ஏற்றுக்கொள்ளும் பூமி



விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் போல
மழைக்கோடுகள் ஏணிகளாய் கீழே இறங்க
அந்த ஏணிப்பிடித்து ஏறிப்போய்
மேலே உலவும் என் எண்ணங்கள்