Wednesday, December 9, 2015

ஈரக் கனவுகளின் கனம்



விடியலை ஊர்ந்தே கடந்து
எண்ணங்களின் ஓட்டத்தில் பயணிக்கையில்
மழை பட்டகன்ற இலையீரம் போல
அலை தொட்டகன்ற மணலீரமாய்
நேற்றிரவு முடிந்த கனவின் எச்சம்
என் சிந்தனையில் கசிந்து கொண்டிருக்கிறது

கனவுகளைக் கண்டு நித்தம் பயந்த காலம் மறைந்து
கனவுகளின் மேல் பரிதாபம் தோன்றுகிறது
அன்று என்னைத் துரத்திய பாம்புகள்
இன்று ஒளிந்து கொள்ள இடம் தேடி
வெட்ட வெளியில் ஓடுகின்றன 

அன்று என்னை பயமுறுத்திய காடுகளும் 
அதன் சலசலப்பும் அடங்கி
இன்று துண்டிக்கப்பட்ட 
புகை வண்டி பெட்டிகளாய் நிற்கின்றன 

இன்னும் சற்று கடந்து சென்றால்,
சிட்டு குருவிகளின் சடலங்கள்
உறுமலை மறந்து மௌனத்தை 
உண்டு வாழும் கூண்டு புலிகள்
காலப்போக்கால் வழித்தடத்தை மறந்த ஆறு 

சிறு வயதில் என்னை பயமுறுத்திய பனைமரம்
சுவற்றுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் நான்
என்னை மிரளவைத்த இருளில் ஒரு உருவம்
உச்சி வெயிலில் கத்தும் வேப்ப மரத்து பேய் 

அன்று நான் கனவு காணும் போது 
இறந்த மணித்துளிகள்
தினமும் நான் தனித்திருக்கையில் 
வந்து என்னை இம்சிக்கின்றன

சில நேரங்களில் கலைந்தும் 
சில நேரங்களில் சூழ்ந்தும் 
ஓடும் மேகமாய்
கனவுகளின் தாக்கம் மட்டும் 
என்றுமே ஆழமாய்