Friday, August 12, 2011

நீள் பாதை


நன்கறிந்த ஒரு பாதையில்  
பயணிக்க தொடங்கிய  சில நாட்களில் 
உணர்ந்தேன் அது என்னை  
வேறோர் அறிமுகமற்ற பாதையில் 
ஒப்படைத்து விட்டு  
திரும்பிச் சென்றதை.


இளைத்த பாதங்கள் ஒரு 
விளிம்பரியா பாதையில் 
ஊர்ந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
நான் முடிவற்று நீளும் 
குறிக்கோள் அற்றவன் என 
தெளிவற்ற குரலில் பயமுறுத்தி 
வெகுநாள் பசியில் தனித்து 
அகப்பட்ட என்னை 
விழுங்கிக்கொண்டிருந்தது பாதை.

அவ்வப்போது மின்னி மறையும் 
இப்பாதையின் விளக்கப்படம் 
ஏதோ ஒரு வகையில் என்னை 
ஈர்த்து முன்னேற தூண்டுகிறது.

ஆங்காங்கே சிதறிக்கிடந்த 
என் தற்காலிக குறிக்கோள்களின் 
வரைபடங்களை மிதித்துக்கொண்டும்  
உதறிக்கொண்டும் ஊர்கிறேன்.

பாதையின் ஒருமருங்கில் 
தோன்றிய ஒரு வாக்கியம்: 
முடிவற்று நீளும் யாதொரு பாதையிலும் 
விடைபெற்று மீளல் அரிது

திரும்பிப்போய்விட எத்தனித்து 
திரும்புகையில் சற்று தூரத்தில் 
என் பாதச்சுவடுகள் யாவும் 
மறைந்து வருவது கண்டேன் 

அதை ஒவ்வொன்றாய் விழுங்கி 
ஊர்ந்து வருகிறது ஓர் அரவம் 
ஒவ்வொன்றையும் உண்டு விழுங்கி 
என் அடுத்த காலடிக்காக காத்திருக்கிறது 

நான் நிற்கவோ திரும்பி 
நடக்கவோ முயன்றால் அது 
என்னை தீண்டிவிடும் அபாயம் 
உள்ளதால் சலனமற்ற இப்பாதையில் 
அரவமற்று முன்னேறுகிறேன்.

Wednesday, July 20, 2011

நினைவுக்கிளறல்

மழை நின்றது!
தலை துவட்ட ஆளில்லாமல் 
அனாதையாய் நிற்கும் மரங்கள்

Wednesday, March 2, 2011

திரிபு நிலை



சுய திரிதல் நிகழ்ந்து விட்ட 
சில காலத்திற்கு பிறகு, 
எதிரில் வந்த ஒருவன் 
நான் சமீபமாக என் நண்பர்களை 
புறக்கணிப்பதாக சொன்ன பொழுது 
அது நானாக இருக்க முடியாது 
என்று கூறி நகர்ந்தேன்.

பின்பொருநாள் என்னுடைய 
முந்தைய பிந்தைய அடையாளங்களை 
என்னிடம் காண்பித்து நான் 
மாறிவிட்டதாய் கூறியவன் 
தன்னை உளவியல் நிபுணன் 
என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
என் நிலை குறித்து பேச விரும்பாதவனாய் 
அவனை புறக்கணித்தேன்.

நான் இதை எழுதிக்கொண்டிருகையில் 
திடீரென்று ஒருவன் என்னை அணுகி 
நீ எழுவதை நிறுத்தி விட்டால் 
எல்லாம் சரி ஆகும் 
என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

நான் பொதுவாக எழுதும் 
அனைத்தும் அவளிடம் காண்பித்து 
சரி  பார்த்து கொள்வதால் 
அவளை நாடிச்  சென்றேன் ,
நான் எப்போதும் போல் 
இயல்பாய் எழுதுவதாகவும் இதே போல் 
தொடர்ந்து எழுதுமாறும் சொன்னாள்.

இன்றும் உறங்கும் முன் 
ஒருவன் வந்து தான் தான் நான் 
என்று கூறி  சில ஆதாரங்களை 
காண்பிக்க முயற்சி செய்கிறான் .

அவனை நம்ப முடியாமல் 
திருப்பி அனுப்பும் நேரமும் 
நான் உறங்கும்  நேரமும் 
எப்போதும் ஒன்றாகவே அமைகிறது.