Wednesday, March 2, 2011

திரிபு நிலை



சுய திரிதல் நிகழ்ந்து விட்ட 
சில காலத்திற்கு பிறகு, 
எதிரில் வந்த ஒருவன் 
நான் சமீபமாக என் நண்பர்களை 
புறக்கணிப்பதாக சொன்ன பொழுது 
அது நானாக இருக்க முடியாது 
என்று கூறி நகர்ந்தேன்.

பின்பொருநாள் என்னுடைய 
முந்தைய பிந்தைய அடையாளங்களை 
என்னிடம் காண்பித்து நான் 
மாறிவிட்டதாய் கூறியவன் 
தன்னை உளவியல் நிபுணன் 
என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
என் நிலை குறித்து பேச விரும்பாதவனாய் 
அவனை புறக்கணித்தேன்.

நான் இதை எழுதிக்கொண்டிருகையில் 
திடீரென்று ஒருவன் என்னை அணுகி 
நீ எழுவதை நிறுத்தி விட்டால் 
எல்லாம் சரி ஆகும் 
என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

நான் பொதுவாக எழுதும் 
அனைத்தும் அவளிடம் காண்பித்து 
சரி  பார்த்து கொள்வதால் 
அவளை நாடிச்  சென்றேன் ,
நான் எப்போதும் போல் 
இயல்பாய் எழுதுவதாகவும் இதே போல் 
தொடர்ந்து எழுதுமாறும் சொன்னாள்.

இன்றும் உறங்கும் முன் 
ஒருவன் வந்து தான் தான் நான் 
என்று கூறி  சில ஆதாரங்களை 
காண்பிக்க முயற்சி செய்கிறான் .

அவனை நம்ப முடியாமல் 
திருப்பி அனுப்பும் நேரமும் 
நான் உறங்கும்  நேரமும் 
எப்போதும் ஒன்றாகவே அமைகிறது.