Saturday, May 25, 2013

தக்கென பிழைக்கும் எண்ணங்களால் சுயங்கள் உருவாகும் விதம்




ஓய்வுக்காக காத்திருக்கும் வேளையிலும் 
முடிவெடுக்க வேண்டிய தருணங்களிலும் 
இச்சை செயல்களின் முற்பகுதியிலும் 
என்னுள் தோன்றும் ஆயிரமாயிரம் எண்ணங்கள் 
புற்றீசல் போல் வெளிவந்து 
என்னை உள்ளிழுத்துச் செல்லும்

அவை பசிக்காக நானா 
என் பசிக்காக அவைகளா 
என சிந்திக்கும் வேளையில் 
அவைகள் ஓங்கும் சக்தி ஒடுங்கும் சக்தி
என ஈரணியில் பிரிந்து போரிட துவங்க 
வேங்கைகளின் வேட்டைச் சண்டையை 
வேடிக்கை பார்க்கும் குற்றுயிர் மானாய் 
போரை கவனிக்கையில் பல நேரங்களில் 
ஓங்கும் சக்தி ஒடுங்கியும்
ஒடுங்கும் சக்தி ஓங்கியும் செயல்பட
பெரும்பாலும் ஓங்கும் சக்தியின் வீரர்கள் 
சோர்ந்தும் போரிட வலிமையின்றியும் 
எந்நேரத்திலும் போரிலிருந்து பின்வாங்க 
ஆயத்தமாகவும் இருக்கவே 
ஒடுங்கும் சக்தியே பலமுறை வென்று
தன் முடிவை செயல்படுத்தும்

இது போன்ற போர்களின் முடிவுகளே
என் சுயத்தை வரையறை செய்யும் காரணிகளாகி
நாளடைவில் ஓங்கும் சக்தியே சிந்தனையாய்
ஒடுங்கும் சக்தியே செயலாய் மாறி
செயலென்னும் வெந்நீரில் சிந்தனை மீன் நீந்தும்
போர்களும் தக்கென தழைத்தலுமே மாறிலிகளாய்...

Friday, January 11, 2013

இருளில் உயிர் பெறும் மலைகளும், வெளிப்படும் சுயங்களும்

இருகை கொண்டு பிழிந்தால்
இருள் சிதறும் அளவிலான
காரிருளில் மூழ்கி 
ஊறும் மலையில்,
கிழிபட்டு பொங்கும் அருவியில்
நீரருந்தும் வல்லூறுகளின் மத்தியில்

இடையனின் மந்தையிலிருந்து 
தவறிய ஆடு
இருளைப் போர்த்திக்கொண்டு 
புதரில் பதுங்க

பசியின் மடியில் தவழும் பாம்பு
இருளின் கருமையை உறிஞ்சி
மயங்கிக்கொண்டிருக்கும் வேளையில்

மேகத்தை இருளில் கரைத்து
மலையில் ஊற்றுகையில்
ஆங்காங்கே தேங்கிவிட்ட 
மேக திட்டுக்களாய் 
உறங்கிக்கொண்டிருக்கும் 
யானைகளின் இடையில்
தொலைந்த ஆட்டை தேடும் சிறுவன்

சுவாசிக்கும் காற்றும் இருளாய் மாறி
அவனுள் சென்று தன்னையும்
இருளாய் மாற்றுவது போல் உணர 
தேடு பொருளை மறந்து
கடந்து வந்த வழியையும்
இரவிடம் பறிகொடுத்து 
இருளில் எரிகல்லாய் மறைய

தொலைந்த ஆடு
தவறிய சிறுவன்
அவர்கள் மறைந்த சுவடுகளை
தேடிக்கொண்டிருக்கும் ஓநாய்
என

பல ரகசியங்களை
தன்னில் ஒளித்து
வைத்துக்கொண்டிருக்கும்
கர்வத்தில்
இரவு
உதிர்க்கும் மர்ம சிரிப்பில்
அதிரும் மரங்கள்,..

காற்றை கைவசப்படுத்தி மிரட்டும்
'' வென்ற சத்தத்தில்
அடங்கிப்போகும்
அனைத்து உயிர்களும்...