Friday, January 11, 2013

இருளில் உயிர் பெறும் மலைகளும், வெளிப்படும் சுயங்களும்

இருகை கொண்டு பிழிந்தால்
இருள் சிதறும் அளவிலான
காரிருளில் மூழ்கி 
ஊறும் மலையில்,
கிழிபட்டு பொங்கும் அருவியில்
நீரருந்தும் வல்லூறுகளின் மத்தியில்

இடையனின் மந்தையிலிருந்து 
தவறிய ஆடு
இருளைப் போர்த்திக்கொண்டு 
புதரில் பதுங்க

பசியின் மடியில் தவழும் பாம்பு
இருளின் கருமையை உறிஞ்சி
மயங்கிக்கொண்டிருக்கும் வேளையில்

மேகத்தை இருளில் கரைத்து
மலையில் ஊற்றுகையில்
ஆங்காங்கே தேங்கிவிட்ட 
மேக திட்டுக்களாய் 
உறங்கிக்கொண்டிருக்கும் 
யானைகளின் இடையில்
தொலைந்த ஆட்டை தேடும் சிறுவன்

சுவாசிக்கும் காற்றும் இருளாய் மாறி
அவனுள் சென்று தன்னையும்
இருளாய் மாற்றுவது போல் உணர 
தேடு பொருளை மறந்து
கடந்து வந்த வழியையும்
இரவிடம் பறிகொடுத்து 
இருளில் எரிகல்லாய் மறைய

தொலைந்த ஆடு
தவறிய சிறுவன்
அவர்கள் மறைந்த சுவடுகளை
தேடிக்கொண்டிருக்கும் ஓநாய்
என

பல ரகசியங்களை
தன்னில் ஒளித்து
வைத்துக்கொண்டிருக்கும்
கர்வத்தில்
இரவு
உதிர்க்கும் மர்ம சிரிப்பில்
அதிரும் மரங்கள்,..

காற்றை கைவசப்படுத்தி மிரட்டும்
'' வென்ற சத்தத்தில்
அடங்கிப்போகும்
அனைத்து உயிர்களும்...