நன்கறிந்த ஒரு பாதையில்
பயணிக்க தொடங்கிய சில நாட்களில்
உணர்ந்தேன் அது என்னை
வேறோர் அறிமுகமற்ற பாதையில்
ஒப்படைத்து விட்டு
திரும்பிச் சென்றதை.
இளைத்த பாதங்கள் ஒரு
விளிம்பரியா பாதையில்
ஊர்ந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
நான் முடிவற்று நீளும்
குறிக்கோள் அற்றவன் என
தெளிவற்ற குரலில் பயமுறுத்தி
வெகுநாள் பசியில் தனித்து
அகப்பட்ட என்னை
விழுங்கிக்கொண்டிருந்தது பாதை.
அவ்வப்போது மின்னி மறையும்
இப்பாதையின் விளக்கப்படம்
ஏதோ ஒரு வகையில் என்னை
ஈர்த்து முன்னேற தூண்டுகிறது.
ஆங்காங்கே சிதறிக்கிடந்த
என் தற்காலிக குறிக்கோள்களின்
வரைபடங்களை மிதித்துக்கொண்டும்
உதறிக்கொண்டும் ஊர்கிறேன்.
பாதையின் ஒருமருங்கில்
தோன்றிய ஒரு வாக்கியம்:
முடிவற்று நீளும் யாதொரு பாதையிலும்
விடைபெற்று மீளல் அரிது
திரும்பிப்போய்விட எத்தனித்து
திரும்புகையில் சற்று தூரத்தில்
என் பாதச்சுவடுகள் யாவும்
மறைந்து வருவது கண்டேன்
அதை ஒவ்வொன்றாய் விழுங்கி
ஊர்ந்து வருகிறது ஓர் அரவம்
ஒவ்வொன்றையும் உண்டு விழுங்கி
என் அடுத்த காலடிக்காக காத்திருக்கிறது
நான் நிற்கவோ திரும்பி
நடக்கவோ முயன்றால் அது
என்னை தீண்டிவிடும் அபாயம்
உள்ளதால் சலனமற்ற இப்பாதையில்
அரவமற்று முன்னேறுகிறேன்.