Saturday, March 17, 2012

வலி மிகும் வார்த்தைகளும் நீளும் இரவுகளும்

தன்னிச்சையின் கம் சுமந்து 
செறிவுப்பிசகால் வழி தவறிய சில 
வார்த்தைகளை இடைமறித்து 
மிரட்டும் உன் கண்கள் ...

நழுவிய அவ்வார்த்தைகள் தன் 
பிணைப்பிழந்து வெறும் எழுத்துக்களாய் 
உன் காலில் விழுந்து உடையும் தருணம் 
செறிவுடன் வந்த மற்ற 
வார்த்தைக்குழுக்களோ அவைதம் 
பிறவிப்பயன் வேண்டி 
உன் காதருகே வட்டமிட்டு பறைசாற்றும் 
உன் தாக்கத்தால் என்னில் 
அவை முளைத்த வரலாற்றை.

உன் சிந்தனை ஊற்றில் ஏளனத்தீ எள்ளிநகையாட 
செந்தணல் மீனாய் வெந்தன வார்த்தைகள் 

வன் மிருகத்தால் சிதைக்கப்பட்டு 
குற்றுயிராய் புதருக்குள் பாய்ந்து 
தன் உதிரத்தையும் காரிரவையும் 
ஒரு சேர கழித்துக்கொண்டிருக்கும் 
சிறு மானைப்போல் 
உன் நிராகரிப்பால் காயமுற்ற வார்த்தைகள் 
எழுத்து சொட்டச்சொட்ட ஓடி 
ஒளிந்து கொள்ள இடம் தேடி 
என் அறையின் மூலையில் பதுங்கி 
வெளிவிடும் பயங்கலந்த பெருமூச்சிலும் 
மரண ஓலத்திலும் 
கசியும் ரத்த வாடையிலும் 
துவங்குகிறது என் இரவு.

2 comments:

  1. "நழுவிய அவ்வார்த்தைகள் தன்
    பிணைப்பிழந்து வெறும் எழுத்துக்களாய்
    உன் காலில் விழுந்து உடையும் தருணம் " - அவ்வார்த்தைகள் நழுவி விழவில்லை என்று நினைக்க தோன்றுகிறது.. அவைகள் வார்த்தைகளின் மாத்திரையின் கனத்தாலும் இல்லை.. உன் மனதின் கனத்தை அவ்வார்த்தைகள் பெற்றிருந்த காரணத்தினால்.. புவியீர்ப்பு விசை உன் வார்த்தைகளை விழச்செய்தன, அவளின் விழியீர்ப்பு விசை உன்னை விழச்செய்தன.. ஆகா மொத்தம்.. நீங்கள் இருவரும் (உன் வார்த்தைகளும், நீயும்).. அவள் காலடியில்.. இந்த கோணத்தில் பார்த்தல்... இருவருக்கும் சந்தோசம் தானே..


    மிக்க அருமையான கவிதை.. அழகான சிந்தனை.. வாழ்த்துகள்.. வளர்க.. தொடர்க..

    ReplyDelete
  2. நன்றி முத்து ... ஈர்ப்பு விசைக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு போல :) நல்ல அனுபவம்

    ReplyDelete